பொருளாதார ரீதியாகவும் அரசியல் தலையீடுகளாலும் பல நெருக்கடிகளை சந்தித்த கடந்த காலம் விவசாயிகளின் வாழ்க்கையிலும் பிரச்சினைகளை தோற்றுவித்திருந்தது. போருக்கு பின்னர் விவசாயிகள் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளனர்.
போருக்கு பின்னரான கால கட்டத்தில் குடாநாட்டு விவசாயிகள் தமது உற்பத்தி முயற்சியில் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். நெல் உற்பத்திக்கு அடுத்தபடியாக உப உணவுப்பயிர்செய்கை பணப்பயிர்செய்கை போன்றவற்றை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடாநாட்டு விவசாயிகள் மேற்கொள்ளும் பணப்பயிர்செய்கையில் திராட்சை முக்கிய இடம் பெறுகின்றது.
யாழ் குடாநாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்னரே திராட்சை செய்கை ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக அறியமுடிகின்றது. குடாநாட்டில் உள்ள 62 ஆயிரத்து 269 விவசாயிகளில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் திராட்சை செய்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மண் வளம் நிறைந்த புண்ணாலைக்கட்டுவன் உரும்பிராய் இளவாளை அளவெட்டி அச்சுவேலி ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவு திராட்சை உற்பத்தி செய்யப்படுகின்றது.
தற்போது மீள்குடியேற்றபட்ட பகுதிகளில் 10 ஆயிரம் திராட்சை கொடிகள் பயனளிக்க ஆரம்பித்துள்ளதாக விவசாயத் திணைக்களகத்தினர் தெரிவித்தனர்.
ஆரோக்கியமான திராட்சைக்கொடிகள் விதிமுறைகளுக்கு அமைவாக வளர்க்கப்படின் பத்து தொடக்கம் பதினைந்து வருடங்கள் தொடர்ந்தும் பயன்தரும் என புண்ணாலைக்கட்டுனை சேர்ந்த திராட்சை செய்கை விவசாயி தெரிவித்தார்.
நல்ல செம்மண் நிறைந்த நிலமே திராட்சை பயிரிடுவதற்கு சிறந்ததாகும். பண்படுத்தப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக 320 செடிகள் நடலாம். இதற்காக விசேடமாக தயாரிக்கப்படும் 3அடி சதுரகுழியில் பதிவைக்கப்பட்ட திராட்சை செடிகளை நடவேண்டும். பின்னர் 3 நாட்களுக்கு ஒரு தடவை வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சப்படும். செடிகள் துளிர்விட்டு தழைத்து வரும் சமயத்தில் உறுதியான பந்தல்களில் கொடிகள் படரவிடப்படும். இதற்காக சீமெந்தினாலான நீள தூன்களால் பந்தல்கள் அமைக்கப்படும்.
திராட்சைக்கொடிகளுக்கு போதுமான சூரிய ஒளியும் காற்றோட்டமும் அவசியம். 10 – 20 அடி இடைவெளி இருக்குமாறு கொடிகள் நாட்டப்படும். கொடி நாட்டப்பட்டு 8 மாத காலத்தின் பின்னர் முதல் வெட்டு மேற்கொள்ளப்படும். இது கொய்தல் என அழைக்கப்படும். கொய்தல் மேற்கொள்ளப்பட்டு இரு வாரத்தின் பின்னர் திராட்சைக்கொடிகள் பூக்க ஆரம்பிக்கும். எந்த வித நோய்த்தாக்கத்திற்கும் உட்படாத திராட்சைக்கொடிகள் ப+ மலர்ந்து 100 நாட்களின் பின் அறுவடைக்கு தயாராகிவிடும். வருடத்தில் இரு தடவை பழ அறுவடை மேற்கொள்ளலாம்.
இப் பயிர்ச்செய்கைக்கு ஆரம்ப மூலதனமாக பெரும் தொகை பணம் தேவைப்படுகின்றது. நீண்ட கால பராமரிப்பிற்கும் பொருளாதார வசதியும் கவணிப்பும் தேவைப்படுகின்றது. இப் பயிர்செய்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே அதிகளவு வெற்றி கண்டுள்ளனர்.
ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் கொடியில் அறுவடையின் போது 4000 கிலோ திராட்சை பெற்றுகொள்ள முடியும்.
தற்போது யு-9 பாதை திறக்கப்பட்ட பின்னர் வெளி மாவட்டங்களுக்கு திராட்சை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. வெளி மாவட்ட சுற்றுலாப்பயணிகள் அதிகளவு திராட்சையை வாங்கிச் செல்கின்றனர். யு-9 பாதை பூட்டப்பட்டிருந்த காலப்பகுதியில் ஒரு கிலோ திராட்சை 70 – 80 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ திராட்சை 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சாதாரணமாக பழுக்கும் திராட்சை தேன் போல் இனிப்பானது. விற்பனையை நோக்கமாக கொண்டு பழுக்க வைக்கப்படும்; பழங்கள் புளிப்புத்தன்மையை உருவாக்கும். மழைக்காலங்களில் திராட்சைகப்பழங்கள் வெடித்து விடும்.
திராட்சை செய்கைக்கு போதுமான பொருளாதார வசதிகள் கடன் வசதிகள் அறிவுரைகளும் வழிகாட்டல்களும் சிற்ந்த முறையில் அமையுமாய் திராட்சை உற்பத்தியாளர்களின் வாழ்விலும் ஒளி வீசும்.
0 comments:
Post a Comment