Pages

ஈழம் நோக்கி வாருங்கள்..... மரணத்தோடு போராடி வென்றவர்கள் கதைகளை கேளுங்கள்.

                                                             
துரத்தி துரத்தி வந்த யமதர்ம ராஜாவின் பாசக்கயிற்றில் அகப்படாமல் ஓடி ஓடி ஓய்ந்து போய் கால்கள் சோர்ந்து மரணத்தை வென்று விட்ட சந்தோஸத்துடனும் வாழ்க்கையில் விடியலை தேடி வானம் பார்த்து காத்திருக்கும் ஈழத்து உறவுகளின் மனக்குமிறல்களையும் வீரக்கதைகளையும் ஒரு தடவையாவது கேட்க வாருங்கள். தொலைந்து போன சொந்தங்கள் வர மாட்டார்கள்  என்று தெரிந்தும் வாசல் நோக்கி காத்திருக்கும் உறவுகளின் ஏக்கத்தை நேரில் பார்க்க வேண்டாமா....

யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு முப்பது வருடம் முடிந்து விட்டது. ஆனால் இன்று தான் ஆரம்ப நிலையில் இருப்பது போல் நம் தேசம் இருக்கின்றது. முள்ளிவாய்க்கலோடு முடிந்து விட்டது யுத்தம். இரத்தத்தின் வாடையையும் ஈரமும் இன்னும் காயவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரலின் கதறல்கள் இன்னும் ஓயவில்லை. மரணத்தையும் மரணத்தால் அலைக்கழிக்கப்பட்ட நாட்களையும் கடந்து வந்த நம் மக்கள் விடியல் பாதையை நோக்கி நகரக் காத்திருக்கின்றனர்.

ஈழத்தழிழர் விடியலுக்காக ஆயுதம் ஏந்திப்போராடிய வீரர்கள் யுத்தம் முடிவடைந்தும் இன்னும் புனர்வாழ்வு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் விடுதலைக்காக காத்திருக்கின்றனர். ஈழத்தழிழர்கள் ஏதோ ஒரு வகையில் விடுதலைபுலிகள் அமைப்புடன் தொடர்புபட்டுள்ளது யாவரும் அறிந்த விடயம். போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் உதவியவர்களும் இன்று ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னால் போராளிகள் தம்மை இந்த சமுகத்தில் முழுமையாக இணைத்துக்கொள்ள முடியவில்லை. போட்டி நிறைந்த இந்த காலப்பகுதியில் வேலை தேடிக்கொள்வதும் மிகவும் கடினமானது.  சுய தொழிலை செய்வதற்கும் இவர்களை ஊக்குவிப்பதற்கும் ஆதரவுக்கரங்கள் இன்றித்தவிக்கின்றார்கள்.

தன் பிள்ளை உயிர் வாழ வேண்டும் என்பதற்காக யுத்தம் நடைபெற்று கொண்டிருந்த போது அவசர அவசரமாக நடைபெற்ற திருமணங்கள் ஆணி வேரை இழந்து ஆட்டம் கண்டது. கணவனை இழந்த இளம் விதவைகள் என்ற முத்திரை குற்றப்பட்டு கைக் குழந்தையுடன் தினப் பொழுது எப்படி நகரும் என்று காத்திருக்கும் இந்த பிஞ்சு முகங்களுக்கு விடியல் கிடையாதா.? கூலி வேலைக்கு சென்று குடும்ப சுமையை ஏற்று தலமை தாங்கி வாழும் இளம் பெண்கள் உளவியல் பாதிப்புக்களுக்கும் உள்ளாகியுள்ளனர். உணர்வுகள் இந்த உலகத்தில் மதிக்கப்பட வேண்டிய விடயம். 25 வயதிற்கு உற்பட்ட இளம் பெண்கள் இந்த சமுகத்தில் அனுபவிக்கும் பிரச்சினைகளும் உளவியல் பாதிப்புக்களும் சொல்ல முடியாதவை.

பொழிந்த குண்டு மழையை தாங்க முடியாத வீடுகளும் கட்டிடங்களும் மண்னோடு மண்ணாய் போய் கண்ணீர் கதைகளை மட்டும் பேசிக்கொண்டிருக்கின்றன. நான்கு தடிகளில் நிறுவனங்கள் கொடுத்த தகரங்களை கொண்டு அமைக்கப்பட்ட சிறு குடிசை வீடுகளும் ஏற்றதாழ்வு இன்றிய வாழ்வினை காட்டகின்றது.  
தாய் தந்தை இழந்து கடவுள் தான் தாய் தந்தை என்று கூறி சிறுவர் இல்லங்களில் வாழும் சிறுவர்களின் முகங்கள் சொல்லும் ஆயிரம் வார்த்தைகளை.... யுத்தத்தின் வடுக்களை.... 

கோவில் விழாக்களும் திருமணவைபங்களிலும் கலந்து கொள்வதற்காய் தாய் தந்தை உறவுகளைப்பிரிந்து  மரண பயத்துடன் நாட்டை விட்டு அகதியாய் புலம்பெயர்நாடுகளில் தஞ்சம் புகந்து வாழ்நத மக்கள் முப்பது வருடங்களின் பின்னர் தன் உறவுகளின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காய் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர் .

தம் சொந்த ஊரில் திருவிழாக்கள் கொண்டாட்டங்களில் பங்குகொள்வது மன அமைதியை ஏற்படுத்துகின்றன பழைய நன்பர்கள் ஒன்றாய் வந்த உறவுகளை மீண்டும் காணும் போது தம் பழைய நினைவுகளை மீட்டி பார்ப்பது சந்தோஷமே. ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல் நாட்டில் யுத்தம் முடிந்து கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் தடையின்றி களைகட்டுகின்றது. ஆட்டம் பாட்டம் என்று மகிழ்கின்றது ஒரு சமூகம்.

முப்பது வருட யுத்தத்தில் ஈடுபட்டவர்களும் அதற்கு உதவியவர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர். இவர்களின் மனங்கள் இன்னும் அமைதியை எட்டவில்லை.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னால் போராளிகளும் மீண்டும் தம்மை இந்த சமூகத்தில் முழுமையாக இணைத்து கொள்ள முடியவில்லை. தம்மை முழுமையான போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டவர்களும் சமூகத்தில் இணைந்து கொண்ட பின்னர் தம் வாழ்வை உயர்த்திக்கொள்ள உதவி இன்றி உதரவுக்கரம் தேடி நிற்க்கின்றனர்.

யுத்தத்தின் கோர தாண்டவத்தில் சிக்குண்டு சகோதர உறவுகளை பறிகொடுத்து தாய் தந்தையை இழந்து அநாதை என்ற பட்டத்துடன் சிறுவர் இல்லங்களில் தம் போன்ற சிறுவர்களே தம் சொந்தங்கள்  என வாழும் பிஞ்சுகளின் வளர்ச்சிக்கு உதவுவது தமிழ் உறவுகளின் கடமையே.

தள்ளாடும் வயதில் படுத்து ஓய்வெடுக்கும் நேரத்தில் கஸ்ரப்பட்டு வேலைசெய்து தம் மூன்றாம் சந்ததி உயிர்களை காப்பாற்றுவதற்காய் தம்பிள்ளைகளை இழந்த சோகக் கண்ணீரை மனதிலே வடித்து வடுக்களுடன் வாழும் அந்த உறவுகள் கடவுளிடம் கேட்பது தம் பேரக்குழந்தைகளுக்கு ஒளிமயமான வாழ்வு. அந்த குழந்தைகள் யார் கையும் ஏந்தாது சொந்த காலில் நிற்பதற்கான பாதைகள்.
போராட்டத்தில் தம்மை இணைத்து கால் கை இழந்தவர்களும் பொழிந்த குண்டுமழையில் சிக்கி அங்கவீனமுற்றவர்களும் மனதளவில் ஒதுக்கப்பட்டு உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தம் குடும்பத்தின் சுமைகளை தீர்க்க முயற்சி இருந்தும் வளமின்றி வழியற்றவர்கள் என மனதளவில் வீரமின்றி சோர்வுற்றிருக்கின்றனர்.

நடக்க முடியாத கால்களும் சுடகலன்களின் வேட்டுச் சத்தங்கள் கேட்டு ஓடியது.உறவுகளின் நிலை மறந்து தம் உயிர் காக்க உடைமைகளையும் விட்டு ஓடினர்.ஓட்டம் முடிந்து காணாமற் போன உறவுகளைத்தேடியும் காயப்பட்ட உறவுகளை சுமந்தும் கரை வந்து சே;ந்தனர். அகதி முகாம்களில் ஒரு சொட்டுத்தண்ணீருக்காய் ஒரு நாள் நீண்ட வரிசையில் காத்திருந்த கதைகளையும் முட்கம்பி வேலிகள் சொல்லும் கதைகளையும் ஒரு நிமிடம் கேட்டுப்பாருங்கள்.

பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகளும் நீர் நிரம்பிய குளங்களும் வெயில் காய்ந்து கிடக்கின்றது. சொந்த உழைப்பில் கஸ்ரப்பட்டு வெயிலில் வேர்வை சிந்தி உழைத்து கட்டிய வீடுகள் குண்டுகளால் தடை மட்டமாகி தற்போது அரை திட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் அமைந்த வீடுகளும் தறப்பால் கொண்டு அமைந்த வீடுகளும் கண்களுக்கு தெரிகின்றன. யுத்தம் முடிந்ததிற்கு அடையாளமாய் புறாக்களின் சிறகுகளில் இருந்து வரும் இறக்கை பிடுங்கி வழிந்தோடும் இரத்தம் உணர்த்துகின்றது. வலியின் கொடுமையை போராட்டத்தில் ஈடுபட்டு காணாமல் போன போராளிகளும் உயிர் துறந்தவர்களின் துணைவர்களும் சிறகொடிந்து குடும்பத்தின் தலைமை ஏற்றுள்ளனர். தலைவன் இன்றி தத்தளிக்கும் உறவிற்கு கை கொடுத்து காப்பாற்றுவதற்கு முன்வராதோ இந்த சமுதாயம். சிறுவர் இல்ல சிறுவர்களினது, கணவன் இழந்த  விதவைகளின் முகங்களில் பூக்களில் பூக்காதா? வாடிய முகங்கள் ஒரு முறை சிரிக்காதா?
ஈழத்தின் ஒவ்வொரு உறவுகளும் ஏதோ ஒரு வகையில் யுத்தத்தின் வடுக்களை ஏற்றவர்கள். ஆனால் யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை கை கொடுத்து தூக்க வேண்டும். கொண்டாட்டங்களில் பங்கு பற்றி உறவுகள் கதை பேசி சிரித்து மகிழ வரும் வெளிநாட்டு உறவுகள் சிரிக்க மறந்து உதடுகள் மரத்து போனவர்கள் கதைகளையும் கேளுங்கள். தலையின்றி உயர்ந்து நிற்கும் பனைமரக்காடுகளையும் தரைமட்டமான வீடுகளையும் சோலையிழந்து காய்ந்து பொய்யுள்ள வயல்நிலங்களையும் பாருங்கள். கோயில்களும் சுற்றுலாத்தலங்களையும் மறுமுறையும் பார்க்கலாம் தள்ளாடும் வயதில் வயல் செய்யும் பாட்டன் பாட்டிகளை கேளுங்கள்.

யாராவது வந்து பார்க்க மாட்டார்களா, எம்முடன் பழக மாட்டார்களா என்று என்று சிறுவர் இல்லங்களில் நிரம்பியுள்ள பிஞ்சுகளின் மழலை மொழி பேசும் அழு குரல்களை கேளுங்கள். துரத்திய துப்பாக்கிகளுக்கும் ஓங்கிய தடிகளுக்கும் பயந்து உயிரை காக்க அகதியாய் சென்றவர்களே கொட்டும் பனியிலும் தம் உறவுகளுக்காய் கடுமையாய் உழைத்த உறவுகள் மீண்டும் வாருங்கள் மரணத்தோடு போராடி வென்றவர்களின் கதைகளை கேளுங்கள். 

2 comments:

Unknown said...

ஒருவேளை உணவுக்காக ஏங்கி தவிக்கும் உறவுகளின் அந்த கதறல்களை கேட்க வாறீர் ஈழம் நோக்கி விடுதலைக்காக போராடிய அவர்களின் வீரர்களின் சொந்தங்கள் உறவுகள் இன்று உன்ன உணவின்றி உடுக்க உடை இன்றி இருக்க இருப்பிடம் இன்றி தவிக்கின்றனர் இவர்களின் குறைகளை தீர்க்க யார் உளர் .

abimanju said...

யாரும் இல்லை நம் கண்ணீர் துடைக்க நம் கண்ணீரை நாம் தான் துடைக்க வேண்டும்.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls