மஹேல ஜெயவர்தனவின் சிறப்பான ஆரம்பத்துடன் 158 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை அணி மெண்டிஸின் அபாரமான சாதனையுடன் கூடிய சுழல் கைகொடுக்க 8 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு 2 போட்டிகளைக்கொண்ட இத் தொடரினை 2-0 என்ற நிலையில் இலங்கை அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. இலங்கைஅவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபது20 போட்டி நேற்று பள்ளேகலயில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதனைடுயத்து ஆரம்பவீரர்களாக ஜெயவர்தன, அணித்தலைவர் டில்சான் ஆகியோர் களமிறங்கினர். முதலாவது போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த டில்சான் இப்போட்டியில் ஆரம்பமே அதிர்ச்சியைக்கொடுத்தார். அனைவரது எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கிய அவர் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து சந்திமால்(13 ஓட்டங்கள்), சங்கக்கார (24 ஓட்டங்கள்) ஆகியோர் அணிக்கு ஆறுதலளிக்க ஏனைய வீரர்கள் 10 ஓட்டங்களைக்கூட பெறாது ஏமாற்றமளித்தனர்.இந்நிலையில் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி 157 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது. ஆரம்பவீரராக களமிறங்கிய ஜெயவர்தன அசத்தலாக ஆடி 86 ஓட்டங்களை குவித்தார். 158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் அதிரடியாக இருந்தது. ஆரம்ப வீரராக களமிறங்கிய வொட்சன் 24 பந்துகளில் 6 நான்கு ஓட்டங்கள் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றார். எனவே அவுஸ்திரேலிய அணி 71 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது முதல் விக்கெட்டை 5.5 ஓவரில் இழந்தது. தொடர்ந்து 75 ஓட்டங்களை பெற்றிருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்தது.
மேலும் அவுஸ்திரேலிய அணித் தலைவர் கெமரன் வைட் மற்றும் ஸ்மித் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதும் ஸ்மித் 12 ஓட்டங்களுடன் மென்டிசின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்களும் 10க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இறுதிவரை போராடிய மெரோன் வைட் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.மென்டிஸின் சுழலில் சிக்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 149 ஓட்டங்களைப்பெற்று 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத்தழுவிக்கொண்டது. பந்து வீச்சில் இலங்கை அணிசார்பாக அபாரமாக பந்துவீசிய அஜந்த மென்டிஸ் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து நேற்றைய போட்டியில் மென்டிஸ் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியமை இருபது20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையாக பதிவு செய்யப்பட்டது.எல்லோரும் ரசித்துப்பார்க்க கூடிய போட்டியாக இது அமைந்திருந்தது. ஜயவர்த்தனவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.
0 comments:
Post a Comment