யாரோ யாருக்கோ வைச்ச நிலக்கண்ணி வெடிகள் யாரோ மீள்குடியேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விட்டது. போரில் தம் எதிரிப்படையின் பலத்தை இழக்க செய்ததில் இந்த நில கண்ணி வெடிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் பெரும் பங்களிப்பு செய்தன. யுத்தம் நம் நாட்டில் நடந்தது என்பதற்கு சான்றாக கால்களை இழந்தும் அவயங்களை இழந்தும் வாழும் மக்கள் சாட்சிகளாக உள்ளனர். யுத்தம் ஓய்ந்து விட்டது சமாதானம் வந்து விட்டது மக்கள் தம் இயல்பு வாழ்விற்கு திரும்பி விட்டனர் என்று வெளியுலகத்திற்கு காட்டுகின்றவர்கள் நிலத்தில் மறைந்திருந்து தினம் தினம் அச்சுறுத்தும் கண்ணிவெடிகளுக்கு இன்னமும் முடிவு காணவில்லை.
வட கிழக்கில் யுத்தம் ஓய்ந்து விட்டது. மீண்டும் தம் சொந்த மண்ணில் சென்று வாழவேண்டும் என்று அகதி முகாம்களிலும் உறவுகளின் வீடுகளிலும் ஏக்கத்துடன் வாழும் மக்கள் எப்போது மீள்குடியேற்றம் என்று எதிரபார்த்துக்காத்திருக்கின்றனர்.
நினைத்தவுடன் தம் நிலக்களுக்கு செல்லமுடியாத ஜனநாயக நாட்டில் மீள்குடியேற்றம் மட்டும் உடனடி சாத்தியமா? கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாமல் அபாயப்பிரதேசம் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மக்கள் செல்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் அமைப்புகளின் தீவிர செயற்பாடுகள் வட கிழக்கில் காணப்படுகின்ற போதும் அதிகமாக சிறுவர்களும் பெண்களும் அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது இயலாத ஒன்றாக காணப்படுகின்றது. கண்ணிவெடிகள் பற்றிய கல்வி, அறிவூட்டல், விழிப்புணர்வுகள் எச்சரிக்கை மையங்கள், துண்டுப்பிரசுரங்கள், எல்லைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்று எவ்வளவு தான் செய்தாலும் தம் மக்கள் அதன் தாக்கத்திற்கு உட்;பட்டே வருகின்றனர்.
மிதி வெடிகளில் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஜ.நா விசேட அறிக்கை தெரிவி;க்கின்றது. அதே நேரம் இக் கண்ணிவெடி ஒன்றின் கொள்வனவு 1200 ரூபாவாக காணப்படுகின்றது. இக் கண்ணிவெடியினை அகற்றுவதற்கு சுமார் 115000 ரூபாவரை செலவு செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்ணிவெடிகள் பற்றிய கல்வி விழிப்புணர்வு நாடகங்கள், இன்று பாடசாலையூடாக மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. மாணவர்களின் விளையாட்டு தனம் அவர்கள் வாழ்வில் வினையாகி விடக்கூடாது என்பதற்காகவே இது பற்றிய விளக்கங்கள் பல வடிவங்கிளில் வழங்கப்பட்டு வருகின்றது.
இக் கண்ணிவெடிகள் நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் அச்சுறுத்தல் பொருளாக உள்ளது. அதனால் தான் நிலக்கண்ணி வெடி அற்ற உலகத்தை தோற்றுவிப்பதற்கு உலக மட்டத்தில் ஒன்றுகூடல்களும் அறிக்கைகளும் பல வெளியீடுகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அண்மையில் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற 'கார்டகெனா' மாநாட்டில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இதிலிருந்து விடுபடுவதற்கு ஐந்து ஆண்டுகள் கொண்ட திட்டமொன்றின் வரைபிற்கு அங்கீகாரம் வேண்டிநிற்கின்றது. அதாவது மனிதர்களுக்கு எதிரான நிலைக்கண்ணிவெடிகளின் தடுப்பு மீதான உடன்படிக்கையின் பிரகாரம் கண்ணிவெடிக்களை அகற்றுதல், கண்ணிவெடியால் பாத்pக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், மீதமுள்ள சகல கண்ணிவெடிகளையும் தேடி; அவற்றை அழித்தல் என்பனவற்றுக்காகவே இவை முன்வைக்கப்பட்டன.
10 ஆண்டுகள் அமுலாக்க ஒப்பந்தம் முடிவடைந்தும் இன்னமும் நிலக்கண்ணிவெடிகளால் மக்கள் பாதிக்கபட்ட வண்ணமே உள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் வாழ்வின் மீது நம்பிக்கை இழந்துமுள்ள நிலையில் திட்டத்தை அமுல்படுத்துவதிலிருந்து தவறியுள்ளமையை சுட்டிக்காட்டி நிற்கின்றது.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் மட்டும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 4பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகலாவிய ரீதியில் சுமார் 44 மில்லியன் கண்ணிவெடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெடிக்காத நிலையிலும் வெடிக்கக்கூடிய நிலையிலும் பல மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் நிலத்தில் புதைக்கப்பட்டள்ளன.
ஒட்டாவா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள பல நாடுகள் இதுவரையில் கண்ணிவெடிகளை அகற்றுவதில் தீர்க்கமான முடிவினை எட்டவில்லை என்றே கூறப்படுகின்றது. இது இவ்வாறிருக்க யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் முடிவடைந்தும் இன்னும் அகதிமுகாம் வாழ்க்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
துப்பாக்கி வேட்டுச்சத்தங்களும் அழுகுரல்களி;ன் ஓலங்களும் குறைவடைந்து விட்டன. நிலத்திற்கான போராட்டங்களும் அதிகாரத்திற்கான போட்டிகளும் இல்லாது போனாலும் மீண்டும் தம் சொந்த நிலத்திற்காக தினம் தினம் மனதளவில் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். 20 வருடங்களுக்கு முன்னர் தம் சொந்த நிலங்களைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தம் சொந்த இடங்களை நோக்கி குடியமர்ந்த வண்ணம் உள்ளனர். சோலையாக இருந்த தம் இடங்கள் காடுகளாகி சோலையிழந்து இருக்கும் போது கூட கவலையில்லாத மக்கள் தம் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும் தம் கால்கள் இருக்கின்றவா என்று உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். என்றோ யாருக்கோ வைத்த கண்ணிகள் இன்று தம் கால்களை பழிவாங்கிவிடுமோ என்ற ஏக்கம் இன்னமும் குறையவில்லை. காணிகளை துப்புரவு செய்யும் போதும் குப்பைகளை எரிக்கும் போது கண்ணிகள் பதம்பார்த்து விடாது விலகியே நிற்கின்றனர். ஓடியாடி விளையாடும் தம் குழந்தைகள் விளையாட்டப்பொருளாக கண்ணிகள் ஆகி விடாது கண்ணில் விளக்கென்னை விட்டு விழித்திருக்கின்றனர்.
நிலக்கண்ணிகள் அகற்றி பாதுகாப்பான இடம் என்று அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்களும் நம்பிக்கை இழந்தவர்களாய் நிலக் கண்ணிகளை எண்ணியே வாழ்கின்றனர். நிலக்கண்ணிகள் அகற்றப்பட்ட பிரதேசங்கள் அகறறப்படாத பிரதேசங்கள் என்று அடையாளப்படுதப்பட்டுள்ளமை அகதிகள் தம் நாட்டில் இருக்கின்றனர் என்பதை அடையாளப்படுத்துகின்றது. எஞ்சியிருக்கும் உயிர்களுக்காக யுத்தத்தின் துன்பங்களை மறந்து வாழ நினைக்கும் போது மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மீள் குடியேற்றப்படாத மக்கள் என பிரிக்கப்பட்டு அவர்களும் மிக விரைவில் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என்று அரசாங்கம் கூறிக்கொண்டு வந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமைக்கு காரணம் நிலக்கண்ணி வெடிகள் என்று காரணம் காட்டுகின்றது. அகதிமுகாம்களிலும் உறவுகளின் வீடுகளிலும் கஸ்ரப்படும் மக்கள் தம் சொந்த நிலங்களுக்கு செல்லும் நாளை தினம் தினம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
யுத்தபிரதேசங்களில் 1.5 மில்லியன் மிதிவெடிகளும் வெடிக்காத பொருட்களும் 40 சதுர கிலோ மீற்றர் பகுதியில் பரவிக்காணப்படுகின்றன. இந் நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இவற்றை அகற்றுவதற்காக ஆண்களுக்கும் பெண்களை தலைமைத்துவமாக கொண்டர்களுக்கும் இது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு நிலக்கண்ணிகள் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வறுமைக்காகவும் வேலையில்லா பிரச்சினைக்காகவும் தம் உயிரையும் பணயம் வைத்து இத் தொழிலை செய்து வருகின்றனர். வெடிக்கக் கூடிய நிலையில் உள்ள கண்ணிகள் தொழில் செய்பவர்களின் கால்களில் கண் வைத்து விடுகின்றனர். உறவுகளை இழந்து ஏதிலியாய் உள பாதிப்புக்குள் இருந்தவர்களுக்கு இந்த கண்ணிகள் வாழ்வின் மீதிருந்த கொஞ்ச நம்பிக்கையையும் இல்லாது செய்து விடுகின்றது.
துப்பாக்கி வேட்டுக்களையும் சுடு கலன்களையும் ஓடும் இரத்த வெள்ளத்தையும் தலை வேறு கால்வேறாய் கிடந்த தன் உறவுகளின் பினக்குவியலையும் பார்த்து கடந்து வந்து அகதி என்ற பெயருடன் இன்னும் தம் சொந்த இடங்களை ஒரு தடவையேனும் பார்த்து விட்டு சாகவேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழும் கிழடுகளுக்கு இந்த கண்ணிகள் முட்டுக்கட்டையாக நிற்கின்றன.
20 வருடங்களுக்கு முன்னர் தம் சொந்த இடங்களை விட்டு வெளியேறிவர்கள் இன்று யுத்தம் முடிவடைந்து தம் சொந்த மண்ணை பார்க்க வேண்டும். தம் பழைய நினைவுகளையும் கதைகளையும் தம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும் என்று காத்திருக்கும் பாட்டன் முப்பாட்டன் கனவுகளும் ஏக்கங்களும் எப்போது தீர்க்கப்படும். அகதி என்ற சொல் எப்போது தமிழன் பெயரில் இருந்து நீக்கப்படும்.
0 comments:
Post a Comment