Pages

மரணத்தை தேடிச்செல்லும் உயிர்கள்

 பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்று சொல்வார்கள்.. விரட்டிய துப்பாக்கிகளுக்குள் இருந்து தப்பி குண்டு மழையின் சாரலில் நனைந்து முகாம் வாழ்வில் குளிர்காய்ந்து நொந்து வந்துள்ள மக்களுக்கு அதிகரித்து வரும் விபத்துக்களும், மரணங்களும் வாகன ஓட்டுனர்களுக்கு பயத்தினை ஏற்படுத்தியுள்ளதோ இல்லையோ அவர்களின் உறவுகளுக்கு பயத்தினை காட்டி விட்டது. காலையில் செல்பவர்கள் மீண்டும் திரும்பி வீடு வந்து சேரும் வரை மரண பயம் தான். யாழ்ப்பாணத்தில் தினம் தினம் நடைபெறுகின்ற விபத்துக்களும் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களுமே அதற்கு காரணம். காப்பெற் வீதிகளின் ; விரைவான ஓட்டம் விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகின்ற போதும் மக்கள் வீதி ஒழுங்கை பின்பற்றாமையும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது. வீதிக்குறியீடுகள் போடப்பட்டிருக்கின்ற போதும் அதனை மக்கள் அவதானிப்பதில்லை. விரைவான ஓட்டத்தால் மரணங்களும் போட்டி போட்டுக்கொண்டு அரங்கேறுகின்றன.
 
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் பெரு வாகனங்களின் பாவனைகள் கடந்த காலத்தை விட தற்போது கணிசமான அளவு அதிகரித்து காணப்படுகின்றன. யாழ் மாவட்டத்தில் 2005 ஆம் ஆண்டு 51151 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2010 ஆண்டு 83329 வாகனங்களும் 2011 ஆண்டு 77859  வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2012 ஏப்ரல் மாதம் வரை 81156 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு போக்குவரத்துத் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன. கால் நடையாக நடந்து சென்ற மனிதன் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்குடன் அதிவேக வாகனங்களை கண்டுபிடித்தான். கட்டுக்கடங்காத வாகனங்கள் மனித உயிர்களை பறிக்கின்றன. யாழ்ப்பாண வீதிகளின் தரம் அதிகரிக்கப்பட்டு வருகின்ற அதே வேளை விபத்துக்களும் மரணங்களும் போட்டி போட்டு நடைபெறுகின்றது. யாழ்ப்பாண வீதிகளில் பொலிஸாரும் பாடசாலை மாணவர்களும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களும் சரி வாகனசாரதிகளும்; சரி வீதி ஒழுங்கு முறைகளை ஒழுங்காக  கவனிப்பதில்லை. மக்களின் கவனம் இன்மையினால் தங்களுக்காக மரணத்தை தாங்களே தேடிச்செல்கின்றனர் என்று தான் கூறவேண்டும்.
 
சாரதி பயிற்சி நிலையத்தில் முறைப்படி கற்று சாரதி அனுமதி பத்திரம் பெற்று பயணிக்கும் சாரதிகள் வீதி ஒழுங்கை கவணிக்காமையும் அதனை பின்பற்றாமையும் மரணத்திற்கு முக்கிய காரணமாகும்;. ஒவ்வொருவருடைய விதியும் அவர்களாலேயே தீர்மாணிக்கப்படுகின்றது. மதுபாவனையும், போதையில் சாரதிகள் வண்டி ஓட்டிச்செல்கின்றமையும் தங்கள் விதியை மட்டுமன்றி எதிரே வருபவரின் விதியையும் சேர்த்தே மாற்றியமைக்கின்றனர்.
;
.குன்றும் குழியுமாக காணப்படும்; வீதிகள் தற்போது மெதுவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இது எம் இளைய சமுதாயத்திற்கு தெரியாதா? அதிவேகப் பயணம் குன்றும் குழியுமான வீதிகளில் மரணக்குழிகளை அமைத்து விடுகின்றன. புதிய புதிய மோட்டார் சைக்கிள்களின் வருகை வீதிகளை அலங்கரிக்கின்றன. இந்த மோட்டார் சைக்கிள்கள் தற்போதைய காப்பெற் வீதிகளில் சறுக்கு தன்மையை ஏற்படுத்தி விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. புதிய ரக மோட்டார் சைக்கிள்களும் எம் இளைய சமுதாயமும் அதிவேகப்பயமும் ஆபத்து நிறைந்தவை.
 
போரில் சிந்திய குருதி ஒரு புறம், விபத்தில் சிந்தும் குருதி மறுபுறம் இப்படியே இரத்தம் சிந்தும் முறமை பழைமையாகிப் பேர்ய்விட்டதோ நம் சமுதாயத்திற்கு. பட்டகாலிலே படும் என்று சொல்வார்கள் மரணத்தையும் மரணபயத்தையும் கடந்து வந்து நிர்க்கதியாய் நிற்கும் நம்மவர்க்கு இந்த விபத்துக்கள் மீண்டும் மரணத்தையும் மரண பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யாழ் மக்களை பொறுத்தவரை தற்போது வீட்டிற்கு ஒரு வாகனம் இல்லை எனில் கௌரவக் குறைச்சல் என்ற நிலை தோன்றியுள்ளது. தனி மனித வாகனங்கள் நகர் பகுதியில் நெரிசலை ஏற்படுத்தும் அதே வேளை விபத்துக்களுக்கும் காரணமாக அமைகின்றது. கால்நடையாக நடந்து திரிந்த மனிதன் வாகனங்களை நம்பி வாழ்கின்றமை துவிச்சக்கர வண்டி பாவனையை கேள்விக் குறியாக்கியுள்ளது.
 
வேலைகளையும் நேரத்தையும் வாகனங்கள் இலகுபடுத்தி வருகின்றது. காலையில் வாகனம் எடுத்துச்செல்லும் உறவுகள் மீண்டும் வீடு திரும்பும் வரை அந்த குடும்பம் ஏக்கத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலை. விபத்து என்ற செய்தி வந்ததும் தம் பிள்ளையா? தன் கணவனா? என்று ஒவ்வொரு உறவும் தினம் தினம் பதறுகின்ற நிலை உருவாகியுள்ளது.
 
அவசர வேலையாக இருப்பின் நிதானமின்றி செல்லும் சாரதிகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. விபத்துக்களை கட்டுப்படுத்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்ற போதிலும் தினம் தினம் விபத்துக்ள் அதிகரித்த வண்ணமே உள்ளன. விபத்துக்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் ஒவ்வொரு பயணியின் ஒத்துழைப்பும் அவசியம்.  மக்களுக்கும் வீதி ஒழுங்கு பற்றிய போதிய அறிவின்மையும் யாழில் ஏற்படும் வீதி விபத்துக்கு காரணமாகும். வீதிக்குறியீட்டு சமிஞ்சை விளக்குகள், கடமையில் ஈடுபடும் பொலிஸார் இன்மை என்று விபத்துக்களுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்ற போதும் தமக்கான விதியை மக்களே ஏற்படுத்துகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls