யாழ்.மாவட்டத்தில் அண்மைக் காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துக் காணப்படுதால் வீதியூடாக அச்சத்துடனேயே பயணிக்க வேண்டி உள்ளது. தற்போது காப்பெற் வீதிகளாக மாற்றப்பட்டிருக்கும் வீதிகளிலேயே அதிகளவான வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இந்த வீதி விபத்துக்களில் பலர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் தமது அங்கங்களை இழந்துள்ளனர். தட்டாதெருச் சந்தி - நல்லூர் பாரதியார் சிலை வரை முத்திரைச்சந்தி – செம்மணி வீதி வரை மானிப்பாய் வீதியின் யாழ் நகைரை அண்மித்த பகுதி வரை பருத்தித்துறை வீதி நெல்லியடி வரையான வீதிகள் காப்பெற் போடப்பட்டுள்ளதுடன் வேம்படி வீதி கொழும்புத்துறை வீதியின் ஒரு பகுதி பழைய பூங்கா வீதி என்பனவும் காப்பெற் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த வீதிகளில் அதிகளவான வாகனங்கள் அதி வேகத்துடனேயே பயணிப்பதுடன் சந்திகள் வளைவுகள் என்பவற்றில் வாகனத்தின் வேகத்தைக் குறைத்துச் செல்லாமல் வந்த வேகத்திலேயே செல்வதை அவதானிக்க முடிகிறது.இதனால் காப்பெற் வீதிகளில் அதிகமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கந்தர்மடச் சந்தி மற்றும் மானிப்பாய் வீதியிலேயே அதிகளவான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.பொலிஸாரின் முயற்சி தோல்வி
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் இந்த விபத்துக்களைக் கட்டுப்படுத்த போக்குவரத்துப் பொலிஸாரினால் அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.யாழில் எவருமே வீதி விதிமுறைகளை கடைப்பிடிக்காமையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் தொடர்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.பாடசாலை மாணவர்கள் முச்சக்கரவண்டிச் சாரதிகள் பொதுமக்கள் என அனைவருக்கும் வீதி விபத்துக்கள் மற்றும் வீதி விதிமுறைகள் பற்றி விழிப்பூட்டும் நடவடிக்கையில் தொடர்ந்தும் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் எனினும் பொதுமக்கள் ஒத்துழைத்தாலே இதனைக் கட்டுப்பாடடுக்குள் கொண்டுவர முடியும் என்றும் சமன் சிகேரா கூறினார்.
காப்பெற் வீதிகளில் நடைபெறும் விபத்துக்களை தடுப்பதற்கு சில நடவடிக்கைகளை வீதி அபிவருத்தி அதிகார சபையினாலேயே மேற்கொள்ள முடியும் எனவும் அதனைப் பொலிஸாரால் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பாக கேட்டறிய பொறியியலாளர் சிவராஜலிங்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தியபோதும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
அண்மையில் நடைபெற்ற மோசமான விபத்துக்கள்.
கந்தர்மடம் அரசடி வீதியில் டிசம்பர் 1ஆம் திகதி மணியளவில் வீதி விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் உயிரிழந்துள்ளார். அத்துடன் வடமாராட்சி குஞ்சர்கடை இமையாணன் பகுதியில் டிசம்பர் 13ஆம் திகதி நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவை காப்பெற் வீதியில் அண்மையில் நடைபெற்ற மிகவும் மோசமான விபத்துக்களாகும்.வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோர் வீதி விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் விபத்துக்களால் எற்படும் உயிரிழப்புகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.இதேவேளை வீதி விபத்துக்களைத் தவிர்க்க வெகு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment