எங்களுடைய எதிர்கால சந்ததியும் சமுதாயமும் போதைப் பொருள் பாவனையின் தாக்கங்களிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான சமுதாயமாக கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையினால் அண்மையில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட கமக்காரர்களின் சமூக பொருளாதார நிலையின் மீது புகையிலைப் பயிர்ச்செய்கைக்கு எதிராக மாற்றுப் பயிர் செய்கையின் தாக்கம் தொடர்பான ஆய்வு நூலின் தமிழாக்க வெளியீட்டு விழா இன்று கேதீஸ்வரன் தலைமையில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இலங்கை பூராகவும் 21வயதிற்குட்பட்டவர்களுக்கு எந்தக் காரணம் கொண்டும் புகைத்தல் சார் உற்பத்திப் பொருட்கள் மற்றும் போதைப் பொருள் சார்ந்த எந்தப் பொருளையும் விற்பனை செய்ய முடியாது. அவ்வாறு மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கும் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தீர்மானித்துள்ளது.யாழ். மாவட்டத்தில் அரச வைத்தியசாலைகள் சுகாதார பணிமனைகள் ஏனைய அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் புகைத்தல் தவிர்க்கப்பட்ட வலையங்கள் என பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
இளம் சமூகத்தில் மதுப்பாவனை மற்றும் போதைப் பொருட்பாவனை தற்போது அதிகரித்து வருவதை நாம் நேரடியாகக் காண முடிகின்றது. இதனால் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வருகின்றது.அத்துடன் யாழ் மாவட்ட மக்களுடைய பாரம்பரியமாக புகையிலைப் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவர்கள் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருகின்ற பயிராக மக்கள் ஒருஎண்ணத்தைக் கொண்டுள்ளனர். ஆனாலும் அவர்களை இப் புகையிலைப் பயிர்ச்செய்கையில் இருந்து விடுவித்து இதற்கு மாற்றீடான பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.இதற்காக கல்வித்திணைக்களம் அரச திணைக்களம் பொலிஸ் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒன்றிணைந்து போதைப் பொருள் மதுப்பாவனை என்பனவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.எங்களுடைய எதிர்கால சந்ததியும் சமுதாயமும் போதைப் பொருள் பாவனையின் தாக்கங்களிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான சமுதாயமாக கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இன்நிகழ்விற்கு வட மாகாண அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யூட் வட மாகாண விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் (விரிவாக்கல்) சிவகுமார் நாட்டா நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் பிரசன்னகூரே சுகாதார திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் காவற்துறையினர் மற்றும் வர்த்தகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
யாழ் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் பலசரக்குக் கடைகளின் 33 உரிமையாளர்கள் சமூகத்தின் பொது நலம் கருதி தாமாகவே முன் வந்து தாங்கள் எந்த விதமான புகைத்தல் பொருட்களை இனிமேல் விற்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.
அவர்களது உறுதி மொழியினை மதிப்பளித்து சுகாதாரத் திணைக்களத்தாலும் மது வரித்திணைக்களத்தாலும் அவர்களுக்கு இங்கு சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் சுமார் 700 ஏக்கர் வரையான நிலப்பரப்பு புகையிலைப் பயிர் செய்கையில் உள்ளதோடு சுமார் 3000 விவசாயிகள் இப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2008 தொடக்கம் 2010ம் ஆண்டு வரையில் புகையிலைப் பயிர் செய்கையானது அதிகதித்துள்ளது. ஏனெனில் ஏ9 பாதை திறக்கப்பட்டதுடன் புகையிலைக்கான கேள்வி அதிகரித்தமையே இதற்குக் காரணமாக அமைவது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் பணப்பயிராகவும் விவசாயிகளில் வாழ்வில் ஒளி வீசும் தெய்வமாகவும் இப் புகையிலை செய்கை காணப்படுகின்றது.
0 comments:
Post a Comment